பிஎஸ்பி அலுவலகத்தில் வைக்கப்படும் ஆம்ஸ்ட்ராங் உடல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக எடுத்து செல்ல போலீசார் மறுப்பு தெரிவித்ததால், அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மருத்துவமனையில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இயக்குனர் பா. ரஞ்சித் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், பகுஜன் சமாஜ் மாநில கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  கட்சி அலுவல வளாகத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திற்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. பின்னர், பொதுமக்களின் அஞ்சலிக்காக செம்பியம் பந்தர் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். 

அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து நாளை பிற்பகல்  பி.பி. ரோடு மயான பூமியில் இறுதிச் சடங்கு நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிஎஸ்பி தேசிய தலைவர் மாயாவதி நாளை காலை 10 மணிக்கு சென்னை வரவுள்ளதால், நாளை பிற்பகல் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடலுக்கு எம்பாமிங் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.


Night
Day