எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, தியாகராய நகரில் ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று மாலை தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பில் அரசியல் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் பிற்பகல் 3 மணிமுதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் வாகனங்கள், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், CIPET-ல் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள், கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள்,
டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்,
அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.