எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் நரேந்திர மோடி தனது 2வது நாள் சுற்றுப்பயணத்தின்போது இன்று வேலுர், கோவை மேட்டுப்பாளையத்துக்கு சென்று தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று 7 வது முறையாக வந்த பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை வந்தார். தியாகராய நகரில் நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார். பின்னர் நேற்றிரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார். 2வது நாளான இன்று காலை 9 15 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்படுகிறார். வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூா் பா.ஜ.க. வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு வரும் அவா், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படை தளத்துக்கு விமானத்தில் செல்கிறார். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமா் மோடி, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதில் கோவையில் போட்டியிடும் அண்ணாமலை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். அதன்பிறகு சூலூா் விமானப்படை தளத்துக்கு திரும்பும் பிரதமா் மோடி, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறார். பிரதமர் மோடி , மீண்டும் வருகிற 13 ஆம் தேதி பெரம்பலூரிலும், 14 ஆம் தேதி விருதுநகரிலும், 15 ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.