எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள் தமிழகம் வரவுள்ளார். மதியம் 1.20 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள மாதப்பூர் செல்கிறார். அங்கு நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார். இதையடுத்து அன்று மாலை மதுரையில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். இரவு மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் பிரதமர் மோடி, வரும் 28ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மாதப்பூரில் மாநாடு நடக்கும் இடத்தில் பிரதமர் வந்து செல்வதற்காக 3 ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி முன்னோட்டம் பார்க்கப்பட்டது. மாநாடு நடக்கும் மைதானம் முழுவதும் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.