பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வியாசர்பாடி அருகே பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பூக்கடை பகுதியில் வசித்து வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது 8 கொலை வழக்கு மற்றும் வெடிகுண்டு வழக்கு என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 12 முறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டில் பிரபல ரவுடி சிடி மணியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானதுடன், தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி பாலாஜி, சென்னை வியாசர்பாடி பி.டி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருப்பதாக கொடுங்கையூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், இன்று அதிகாலை 4.50 மணியளவில் பி.டி குடியிருப்பை சுற்றி வளைத்து ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போலீசாரை கண்ட பாலாஜி, அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை நோக்கி சுட்டதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  உடனடியாக அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் கைது செய்யும்போது ரவுடி பாலாஜி தாக்கியதில் காயமடைந்த காவலர்கள் சிலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day