எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லி போலீசாரின் நடவடிக்கையால் தா.மோ. அன்பரசனுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திமுக மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விளம்பர திமுக அரசில் ஊரக தொழில்துறை அமைச்சராக உள்ள தா.மோ. அன்பரசன், பிரதமர் மோடியை காட்டமாக விமர்சனம் செய்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையை அடுத்துள்ள பம்மலில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அன்பரசன், எவ்வளவோ பிரதமரை சந்தித்துள்ளோம், ஆனால் இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்றும், திமுகவை அழித்துவிடுவேன் என பிரதமர் கூறுயுள்ளார், நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன், இல்லாவிட்டால் பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்'' என பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்.
தா.மோ. அன்பரசனின் இந்த பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான அதிருப்தி அதிகரித்து வருகிறது என்றும், இதனால் திமுக அமைச்சர்கள் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் செயலில் இறங்குகின்றனர் என காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ரஞ்சன் அளித்த புகாரின் பேரில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.