புத்தாண்டு சிறப்பு வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆங்கிலப் புத்தாண்டு மலர்ந்ததை அடுத்து, கோவில்களில் திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

2025ம் ஆண்டு பிறந்ததை அடுத்து, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதேசமயம் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற  காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு, அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சாமியை வழிப்பட்ட பக்தர்கள் அங்குள்ள சரயு நதியில் புனித நீராடினர். 

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோவிலில், புத்தாண்டை நடைபெற்ற பஸ்ம ஆரத்தியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தலைநகர் டெல்லியில் கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு திரண்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விஜயவாடா கனக துர்கா கோயிலில் புத்தாண்டின் முதல் நாளில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி  அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிலையில் கோயிலுக்கு வருகை தந்தை பல்லாயிரக்கணக்காக பக்தர்களில்., கடும் நெரிசல் காரணமாக உள்ளே செல்ல முடியாதவர்கள் வெளியில் நின்றவாரே கற்பூரம் மற்றும் தேங்காய் உடைத்து வணங்கி சென்றனர்.

தொடர் விடுமுறை காரணமாக தஞ்சை பெரிய கோயிலுக்கு வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை புரிந்ததால் ஒரு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் புத்தாண்டை முன்னிட்டு பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. 


 

Night
Day