எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் ரமலான் பிறை தென்பட்டதை அடுத்து, இன்று முதல் புனித ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் தொடங்கியுள்ளனர். இதனையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளானோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது வழக்கம். ஐம்பெரும் கடைமைகளில் ஒன்றான இந்த நோன்பை, ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப இஸ்லாமியர்கள் தொடங்குவர். அந்த வகையில், தமிழகத்தில் நேற்று வானில் பிறை தென்பட்டதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். இதனையடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் தொடங்கியுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள பழமையான ஜாமியா பள்ளிவாசலில் இன்று அதிகாலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். முன்னதாக நோன்பு இருப்பவர்களுக்கு சகர் உணவு வழங்கப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளிவாசலில் இன்று காலை ரமலான் நோன்பு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நோன்பு வைத்தனர். அதனைத் தொடர்ந்து காலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் உள்ள நவாப் பள்ளியில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்திலுள்ள மேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் ஜாமியா பள்ளிவாசலில் தராவிஹா என்னும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று ரமலான் நோன்பை தொடங்கினர்.