எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட, தமிழகத்தில் மக்களாட்சி விரைவில் மலர, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் வழி பிறக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டுள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கிட, பசியும், பிணியும், பகையும் நீங்கிட, நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திட பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தியில், உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாளில், தனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" எனத் தொடங்கும் குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை உழவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்று உழவுத் தொழிலின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றுகிறார் - இத்தகைய சிறப்புமிக்க உழவுத் தொழிலை போற்றிடும் வகையில் பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்வதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்நன்னாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலமிட்டு, கொத்து மஞ்சள் குலைகள் கட்டி, தித்திக்கும் கரும்பு, காய்கறிகள், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு, புதுப்பானையில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.
மேலும், உழவர் பெருமக்கள் தமது வேளாண் நிலங்களில் சாகுபடி செய்யும் விளைப் பொருட்களின் உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் இறைவனை வணங்கியும், தம்மோடு சேர்ந்து உழைத்து தம் வருமானத்திற்கு அச்சாரமாக திகழ்கின்ற கால்நடைகளுக்கு தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாளாக தைத்திருநாளினை கொண்டாடி மகிழ்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
“கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்று திரைப்படத்தில் பாடிய புரட்சித்தலைவர் அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் உழவுத்தொழிலை காப்பாற்றிடவும், அதனை மேம்படுத்திடவும் சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.
புரட்சித்தலைவரின் ஆட்சிக்காலத்தில் தான் தமிழகத்தில் விவசாய விளைநிலங்களின் பரப்பளவு 17 லட்சம் ஹெக்டேரில் இருந்து 70 லட்சம் ஹெக்டேர் ஆக உயர்ந்தது, இந்தியாவிலேயே கரும்பு விளைச்சலில் தமிழகம் முதல் இடத்திலும், நெல் உற்பத்தியில் 2-ஆம் இடத்திலும் இருந்ததை இந்நேரத்தில் நினைவுகூற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களும் உழவர் பெருமக்களின் நலனை பேணிக் காத்திடவும், அவர்களின் வாழ்வு வளம் பெறவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதிலும் குறிப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் "உழவர் பாதுகாப்பு திட்டம்" கொண்டு வந்ததன் மூலம் தமிழகத்தில் விவசாயத்தொழில் தன்னிறைவு அடைந்ததை யாராலும் மறுக்க முடியாது -
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நெல் சாகுபடி உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்படும் பரப்பினை அதிகரித்தல், பயறு வகைகள் சாகுபடியை பெருக்குதல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், துல்லிய பண்ணையம் மூலம் சாகுபடி மேற்கொள்ளுதல், சொட்டுநீர் பாசன முறையை ஊக்குவிக்க மானியம் வழங்குதல், விளைபொருட்களைப் பாதுகாப்பாக வைக்க கிடங்குகள் அமைத்தல், வேளாண் இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் அளித்தல், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல் என பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகத் தான் உணவு தானிய உற்பத்தியில், ஒவ்வொரு ஆண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் தமிழகம் புதிய சாதனையை படைத்தது என்பதை இந்நேரத்தில் எண்ணிப் பெருமிதம் அடைகிறேன்.
நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் உழவர் பெருமக்களுக்கு என்றென்றும் உறுதுணையாகவும், விவசாயத்தை அழிந்திடாமல் பாதுகாத்திடவும் நாம் அனைவரும், குறிப்பாக இளம் தலைமுறையினர் முன் வர வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், ஜாதிமத பேதமின்றி, இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று அனைவராலும் ஒற்றுமையோடு சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடப்படுகின்ற இந்த அறுவடைத் திருநாளில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும், சகோதரத்துவம் தழைக்கவும், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமை ஓங்க மதநல்லிணக்கப் பொங்கலாய் நாம் அனைவரும் கொண்டாடுவோம் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள், இடுபொருள் விலை உயர்வு, விவசாய கூலி உயர்வு, திமுக விளம்பர ஆட்சியில் நெல்கொள்முதலை சரியாக செய்யாதது, சாகுபடி செய்த பயிர்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்காதது போன்ற எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியிலும் இந்த வேளாண் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு, நம் அனைவருக்கும், உணவளிக்கும், உழவர் பெருமக்களுக்கு, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரம் மென்மேலும் உயர்ந்திடவும் இந்நன்னாளில் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட, தமிழகத்தில் மக்களாட்சி விரைவில் மலர, தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் வழி பிறக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், அனைவரது வாழ்விலும் இன்பம் பொங்கிட, பசியும், பிணியும், பகையும் நீங்கிட, நாட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திட, பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் தனது நெஞ்சம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக் கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.