எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை முல்லைநகர் பகுதி மக்கள் நேரில் சந்தித்து, தங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு அளித்ததற்காக நன்றி தெரிவித்தனர்.
மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீ.பீ. குளம் கண்மாயை சுற்றி நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி நீதிமன்ற உத்தரவை காரணம்காட்டி, சில மாதங்களுக்கு முன்னர் முல்லைநகர், நேதாஜி மெயின்ரோடு பகுதிகளை சேர்ந்த 642 வீடுகளை காலி செய்ய நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 42 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 70 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துவரும் மக்களை வெளியேற்றாமல் அவர்கள் நிரந்தரமாக வாழ்ந்திட தமிழக அரசு நிலத்தை வகை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் குடியிருப்புகளை காலி செய்யும் நடவடிக்கையை கைவிட்டு உரிய தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தி அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், புரட்சித்தாய் சின்னம்மா சார்பில், நேரடியாக மக்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உசிலம்பட்டியில் இன்று நடைபெறும் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க மதுரை வந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மாவை, அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள கோர்டியார்ட் தனியார் தங்கும் விடுதியில் முல்லை நகர் பகுதி மக்கள் நேரில் சந்தித்து தங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், தங்கள் பகுதிக்கான பிரச்சனை குறித்து அரசை வலியுறுத்தி உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் முல்லைநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே, தனியார் தங்கும் விடுதியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிரசாதங்களை அர்ச்சகர்கள் வழங்கினர்.