புரட்சித்தாய் சின்னம்மா "சுதந்திர தின வாழ்த்து"

எழுத்தின் அளவு: அ+ அ-

சுதந்திர தினத்திருநாளை முன்னிட்டு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்திய திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக போராடி மறைந்த பல தியாக வீரர்களைக் கொண்ட வீரமிக்க மாநிலம் நம் தமிழகம் ஆகும் என்றும், சுதந்திரப் போராட்ட களத்தில், தமிழகத்தில் இருந்து பங்கேற்ற மாமன்னர் பூலித்தேவன், வீரன் அழகு முத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட எத்தனையோ தியாகிகளை இந்த தருணத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று, தன்னலம் பாராமல், ஆண்களுக்கு இணையாக பெண்களும் குறிப்பாக வீரமங்கை வேலு நாச்சியார், தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பங்கு மகத்தானது என்பதையும் நாம் நினைவுகூற கடமைப்பட்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய தியாகிகளைப் போற்றி பெருமைப்படுத்துவதுடன், அவர்தம் தியாகங்களை எதிர்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் புரட்சித்தலைவி அம்மா நம் தியாக சுடர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பியதையும், தியாகிகளுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவப் படிகளை உயர்த்தி வழங்குதல் போன்ற எண்ணற்ற பணிகளைச் செய்ததையும் இந்நேரத்தில் தெரிவிப்பதில் பெருமையடைவதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என பேரறிஞர் அண்ணாவின் வாக்கிற்கிணங்க, "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று புரட்சித்தலைவர் பாடிய வைர வரிகளைப் பின்பற்றி, "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற புரட்சித்தலைவி அம்மாவின் தாரக மந்திரத்தை, ஒவ்வொருவரும் கடைபிடித்து, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று நம் புரட்சித்தலைவி அம்மா சுட்டிக் காட்டிய வெற்றி இலக்கை, எட்டிப்பிடிப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம் என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் மதத்தால் வேறுபட்டு இருக்கலாம், நிறத்தால் வேறுபட்டு இருக்கலாம், மொழியால் வேறுபட்டு இருக்கலாம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் முன்னோர்கள் நள்ளிரவில் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதே ஒவ்வொரு இந்திய குடிமகனின், இந்திய குடிமகளின் கடமையாக கருதி, இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், அழிவுப் பாதையில் பயணிக்கும் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, வளமிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி, தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் தனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day