புரட்சித்தாய் சின்னம்மா விஜயதசமி, ஆயுதபூஜை நல்வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நினைத்த காரியங்கள் அனைத்தையும், அன்னை அம்பிகையின் அருளால் வெற்றியுடன் நிறைவேற்றிட, கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையையும், பத்தாவது நாளில் விஜயதசமியையும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் என் அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மக்களால் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்கள், தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்காதேவியையும், அடுத்த மூன்று நாட்கள், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள், அறிவின் வடிவமான சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

"செய்யும் தொழிலே தெய்வம்" எனப் போற்றி, தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற்கருவிகளையும், இயந்திரங்களையும் தூய்மைப்படுத்தி சந்தனம், குங்குமமிட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி ஆயுத பூஜை திருநாளினை அனைவரும் பக்தியுடன் கொண்டாடி மகிழ்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, மகிஷாசுரன் என்னும் கொடிய அரக்கனை அன்னை பராசக்தி அழித்து வெற்றி வாகை சூடிய நாளினை விஜயதசமி திருநாளாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது - மேலும், விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு, நற்காரியங்களை தொடங்கிடும் வெற்றித் திருநாளாகவும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக இருந்து வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட தனது இனிய ஆயுதபூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தமிழக மக்கள் அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்வதாக அ.இ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day