புஷ்பானா ஃப்ளவர் இல்ல ஃபயர்...! அசத்தும் பெண் கார் மெக்கானிக்...

எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்ணாக இருந்து எதுவும் சாதிக்க முடியாது என ஏளனம் செய்தவர்கள் மத்தியில் கார் மெக்கானிக் துறையில் சாதனை படைத்து வருகிறார் சென்னையை சேர்ந்த பெண்மணி ஒருவர். யார் அவர் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...

பெண் பலகீனமானவள் அவர்களால் கார் மெக்கானிக் துறையில் எதுவும் செய்ய முடியாது என அவமானம் செய்தவர்கள் மத்தியில், எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திற்கு தனி ஒரு பெண்ணாக உயர்ந்து பல சாதனை படைத்து வருகிறார், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கார் மெக்கானிக் புஷ்பராணி.

முதுகலை பட்டம் படித்த புஷ்பராணி பெற்றோரை இழந்து தவித்து வந்த நிலையில், உறவினரை நம்பி தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்து அவருடன் சேர்ந்து கார் மெக்கானிக் கடை ஆரம்பித்தார். 

ஆனால் பெண் என்ற ஒரே காரணத்திற்காக தன்னை அவமானப்படுத்தி ஆரம்பித்த தொழிலை பாதியிலே உறவினர் விட்டுச் சென்றதால், முழுமையாக கார் மெக்கானிக் தொழிலும் தெரியாமல் கொரோனா காலகட்டத்தில் முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் புஷ்பராணி.

இருப்பினும் நம்பிக்கையை கைவிடாமல் மெக்கானிக் துறை வல்லுனர்களுடன் தினசரி பயிற்சி மேற்கொண்டார். இதன் பின் முழுநேர கார் மெக்கானிக்காக மாறினார் புஷ்பராணி....

தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை பழுது பார்த்து வழங்கி கார் மெக்கானிக் துறையில் தனி ஒரு பெண்ணாக அசத்தி வருகிறார் புஷ்பராணி.

பெண்ணிற்கு மெக்கானிக் தொழில் பற்றி என்ன தெரியும் என அவமானப்படுத்தியதுதான், தன்னை கார் மெக்கானிக் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தீயை உண்டாக்கியதாக புஷ்பராணி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு கார் மெக்கானிக் வேலை செய்ய தெரியுமா என தொடக்கத்தில் பலர் ஏளனம் செய்த நிலையில், அவமானங்களைக் கடந்து தனக்கு வரும் பணிகளை சிறப்பாக செய்து கொடுத்ததால் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகளை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி கொள்கிறார் புஷ்பராணி.

ஆரம்ப கால கட்டத்தில் கார் மெக்கானிக்காக உடல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்தாலும் மெக்கானிக் துறையில் சாதிக்க வேண்டும் என்று எண்ணத்தில், உணவு பழக்க வழக்கங்களை மாற்றி தற்போது அனைத்து வகை கார்களையும் பழுது பார்க்கும் அளவிற்கு உயர்ந்துள்ளதாக பெருமிதம் கொள்கிறார் புஷ்பராணி.  

தனது வெற்றிக்கு முன் உதாரணமாக எடுத்துக் கொண்டது புரட்சித்தலைவி அம்மாதான் என்றும், எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை கடந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்று எண்ணம் புரட்சித்தலைவி அம்மாவை பார்த்து தான் வந்தது எனவும் புஷ்பராணி தெரிவித்துள்ளார். 

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கார் மெக்கானிக் துறையில், பெண்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்து காட்டிய கார் மெக்கானிக் புஷ்பராணி போன்ற பெண்களை, தமிழக அரசு அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது. 

Night
Day