எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1ம் தேதி மர்ம பொருள் வெடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பான விசாரணையில் அது குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் சென்னையில் தங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில், சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் அப்துல்லா என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. இதேபோல், முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பழங்கொட்டை பகுதியில் உள்ள சேக் தாவுது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சேக் தாவுது சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது வீடு மட்டுமின்றி அவருக்கு தொடர்பான இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.