இரவில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்று பெண்கள் விரும்பக் கூடாதா? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணையை 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் முறையான வார்த்தைகள் கையாளப்படவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை இந்த சமுதாயம் தார்மீக ரீதியாக தண்டிக்கிறது என்றும் பெண்களுக்கான தனிப்பட்ட சுதந்திரம் உரிமையை அவர்கள் தியாகம் செய்யும்படி கூற முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க வேண்டிய சமுதாயம், அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்துள்ள நீதிபதிகள், ஆண்களுக்கு மட்டுமல்ல... பெண்களுக்கும் ஆசைகள், விருப்பங்கள் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
இரவில் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்று பெண்கள் விரும்பக் கூடாதா? பெண்கள் ஆண் நண்பர்களுடன் பேச கூடாதா? தங்கள் விருப்பம் போல் உடை அணிந்து கொள்ள கூடாதா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெண்களின் உரிமை குறித்து இந்த சமுதாயம் அவர்களுக்கு எப்படி கட்டளையிட முடியும்? எப்படி வாழ வேண்டும் என பெண்களுக்கு கட்டளையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும், இது அவர்களது வாழ்க்கை எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.