எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை புறநகரில் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் பெரும்பாக்கம் ஏரி, தற்போது ஆக்கிமிரப்பாளர்களின் பிடியில் சிக்கி நாசமாகி வருகிறது. இதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பரங்கிமலை ஒன்றியம், சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளின் எல்லையின் நடுவே பெரும்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. கடந்த 1960 ஆம் ஆண்டு 400 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த ஏரி, தற்போது 200 ஏக்கருக்குள் சுருங்கிவிட்டதாகவும், ஏரியோரம் மண்ணை கொட்டி ஆக்கிரமித்து வருவதாகவும், குடியிருப்புகளில் இருந்து லாரிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை கொட்டி ஏரியின் நீரை நாசப்படுத்தி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் நீர்நிலை ஆதரவாளர்கள். இவர்களுக்கு போட்டியாக சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகங்களும் பெரும்பாக்கம் ஏரியில் குப்பைகளை கொட்டி நாசம் செய்துவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலையோரத்தில் பெரும்பாக்கம் ஏரியை ஒட்டி, 2 ஏக்கர் பரப்பு நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, லாரி பழுதுபார்ப்பு கடைகள் மற்றும் லாரி 'வாட்டர் வாஷ்' கடைகள் கட்டப்பட்டுள்ளன. இது இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் செயல்படுகிறது. மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிச் சென்று வருகின்றனர். மேலும், பெரும்பாக்கம், வேங்கைவாசல் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து, லாரிகள் வாயிலாக கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. நீர்வளத்தை பாதுகாக்க வேண்டிய நிர்வளத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், வாங்குவதை வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேங்கைவாசல் சித்தேரி மழைநீர் வடிகால்காக போடப்பட்ட இடத்தில் தேவையில்லாமல் மணல்களை கொட்டி கழிவுநீர், கிரீஸ் ஆயில் போன்றவற்றை மழைநீர் போகும் இடத்தில் கொட்டப்படுகிறது. இது, அப்பகுதி திமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் என்பவரின் கவனத்திற்கு அறிந்தே நடப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பெரும்பாக்கம் ஏரியில் கழிவுநீர் விடுவதையும், ஆக்கிரமிப்பையும், குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.