எழுத்தின் அளவு: அ+ அ- அ
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 56-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வரும் 3ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னாட்டு பெர்னார்ட் ஷா” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தமிழர்களின் வாழ்வில் எந்நாளும் நீக்கமற நிறைந்திருப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவர் என்றும் தனது பேச்சாற்றல் எழுத்தாற்றலால் தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா கடைபிடித்து வந்த ஒப்பற்ற கொள்கைகளைப் பின்பற்றி அதேவழியில் நாமும் தொடர்ந்து பயணித்திட, அவர்களது நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழகத் தொண்டர்களோடு ஒன்றிணைந்து மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்களும், அண்ணாவின் தம்பி இதயக்கனியாம் நம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாசமிகு தொண்டர்களும், கழக நிர்வாகிகளும், பெண்கள், இளம்சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்களும், ஜாதி மத பேதமின்றி, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.