பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நங்கவள்ளி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வார சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. பொங்கல் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால், ஆடுகள் 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் உள்ளூர் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. வெள்ளாடு, செம்மறியாடு, மறிக்கை ஆடு உள்ளிட்ட பல வகையான ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட பெண் ஆடு மற்றும் கிடா ஆடு 12 ஆயிரம் முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தருமபுரி சந்தைப்பேட்டை வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் ஆடுகளை வாங்க குவிந்தனர். சுமார் 1 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. 

பொங்கல் பண்டிகைக்கு இரு நாட்களே உள்ள நிலையில், அரியலூர் அருகே அமைப்பட்டிருந்த தற்காலிக ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியது. வெள்ளாடு, மாலாடு, செம்மறியாடு உள்ளிட்ட பல வகையான ஆடுகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். குட்டிகள் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலும், எடை அதிகமுள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 32 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. அரியலூர் வார சந்தையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அரியலூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தற்காலிக ஆட்டுச்சந்தை அமைக்கப்பட்டதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.


விழுப்புரம் மாவட்டம் மடப்பட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு சந்தையில் ஆடு, மாடு, வாத்து, சண்டை சேவல் உள்ளிட்டவையும், காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டன. இதுதவிர மாட்டு பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வண்ணங்களைக் கொண்ட மூக்கணாங்கயிறு, சலங்கை, மணி மற்றும் பொங்கல் பானை உள்ளிட்ட பொருட்களும் சந்தையில் விற்பனையாகின. 

அனைத்து விதமான பொருட்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்பட்டதால், பெரிய செவலை, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருட்களை வாங்க ஆர்வமுடன் குவிந்தனர்.

Night
Day