பொங்கல் பண்டிகை - 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 14 ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆயிரத்து 104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

அதன்படி, வரும் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 8 ஆயிரத்து 368 பேருந்துகளுடன் கூடுதலாக 5 ஆயிரத்து 736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில், கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு பொங்கலின்போது 6 லட்சத்து 54 ஆயிரத்து 472 பேர் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேபோன்று பொங்கல் முடிந்து சென்னை திரும்ப வசதியாக வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 10 ஆயிரத்து 460 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 5 ஆயிரத்து 340 பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 800 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

Night
Day