எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தமிழ்நாட்டில் பொதுத் தேர்வினை எழுத இருக்கின்ற பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து” அதாவது, "ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிலும் உதவும் தன்மை உடையது" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, மாணவச்செல்வங்கள் கல்வியறிவை பெறுவதன் மூலம் எந்த காலத்திலும் வாழ்வில் வெற்றி காண முடியும் என்பதை கருத்தில் கொண்டு தன்னம்பிக்கையுடன் தேர்வினை எதிர்கொள்ளுங்கள். பொதுத் தேர்வை எண்ணி எந்தவித பயமும் இல்லாமல், தைரியமாக எழுதுங்கள். எந்த ஒரு செயலையும் தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் செய்யும்போது அதில் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்பதை எப்போதும் மனதில் வையுங்கள்.
அன்புக்குரிய மாணவச்செல்வங்களே தேர்வு காலங்களில் எந்தவித கவனச்சிதறல்களும் ஏற்படாதவண்ணம் விழிப்புடன் செயலாற்றுங்கள். செல்போன் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் நேரத்தை செலவிடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். உங்களுடைய முழு நேரத்தையும் படிப்பதற்காக செலவிடுங்கள். நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்பதை சிந்தித்து செயலாற்றுங்கள். அதேபோன்று, மாணவச்செல்வங்கள் நல்ல ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை, நேரம் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் நன்றாக உறங்குங்கள்.
உங்கள் உடல்நிலையையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோன்று பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். அவர்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள். அவர்கள் படிப்பதற்கு எந்தவித இடையூறும் இல்லாத சூழ்நிலைகளை அமைத்துக் கொடுங்கள். ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டின் கல்வி வளர்ச்சியை பொறுத்து தான் அமைகிறது. நம் வருங்காலம், இளம் சமுதாயத்தினரின் கையில்தான் உள்ளது. நம் மண்ணில் பிறந்த மாணவச்செல்வங்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து, நம் தேசத்திற்கே பெருமை சேர்த்து கொண்டிருக்கிறார்கள். மாணவச்செல்வங்களே உங்களில் பலர், எத்தனையோ உயிர்களை காக்கும் மருத்துவர்களாக வரலாம்,
நாட்டை காக்கும் ராணுவ அதிகாரிகளாக வரலாம், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக வரலாம், விஞ்ஞான உலகில் வியத்தகு சாதனைகளை படைக்கும் பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களாக வரலாம், உயர்ந்து ஓங்கி நிற்கும் கட்டடங்களை கட்டும் பொறியாளர்களாக வரலாம், உலகமே வியந்துப் பார்த்த விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் போன்று வரலாம். இதுபோன்று எண்ணற்ற துறைகளில் வல்லுனர்களாக நீங்கள் வரவேண்டும் என்பதே எனது ஆசை. எனவே, நம் மாணவச்செல்வங்கள் நல்ல உயர்கல்வி பெற்று, தங்களுடைய வாழ்க்கையில் உன்னத நிலைகளை அடைய, இப்பள்ளிப் பருவ பொதுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது மிகவும் அத்தியாவசியமானது. எனவே, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்க இருக்கும் நம் மாணவச்செல்வங்கள் அனைவரும் வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி, அதில் வெற்றியடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.