பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழில் கொண்டு வர வேண்டும் - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தி திணிப்பு குறித்து பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் ராஜாதித்ய சோழன் மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பயிற்சி மையத்தில் அதன் 56-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். முன்னதாக  அமித்ஷாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து  சி ஐ எஸ் எப் படை பிரிவின்  தலைவர் வீர வாளுடன் வீர வணக்கம் செய்தார்.

இதையடுத்து விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியில் படிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்றார். அதேநேரத்தில்,  பிராந்திய மொழிகளுக்கு இடமளிக்கும் வகையில் ஆட்சேர்ப்புக் கொள்கைகளில் முக்கிய மாற்றங்களைச் செய்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் அரசு என்றும் குறிப்பிட்டார்.

"இதுவரை, CAPF எனப்படும் மத்திய காவல் ஆயுதப்படை ஆட்சேர்ப்பில் தாய்மொழிக்கு இடமில்லாமல் இருந்த நிலையில் தற்போது எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் இளைஞர்கள் தங்கள் CAPF தேர்வை எழுதுவதற்கு  பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56-வது எழுச்சி தின விழாவை தமிழ்நாட்டில் கொண்டாடுவது மிகவும் சிறப்புக்குரியது எனக் கூறிய அமித் ஷா, வரும் 2027-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது இடத்தில் நாட்டின் பாதுகாப்பு படை இருக்கும் அளவிற்கு பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி இறுதியாக சி.ஐ.எஸ்.எப் படைவீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


Night
Day