எழுத்தின் அளவு: அ+ அ- அ
காரைக்குடி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், போலி நகையை அடகு வைத்து மோசடி நடைபெற்றதாக செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்....
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சித்தி வயல் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இச்சங்கத்தில் பூங்கோதை என்பவர் செயல் அலுவலராக பணிபுரிந்த போது, சிற்று எழுத்தர் மற்றும் செயலர் பொறுப்பு வகித்த சுப்பிரமணி என்பவர் மணிமேகலை என்ற பெயரில், 2023 ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி 37 கிராம் 200 மில்லி கொண்ட இரு போலி நகைகளை வைத்து, ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.
அவருக்கு உடந்தையாக நகை மதிப்பீட்டாளர் ராம பிரபு என்பவரும் கணினியில் பதிவேற்றம் செய்து உள்ளார். பதிவேட்டில், ஆவணங்களில் அப்போதைய சிற்று எழுத்தர் மற்றும் செயலர் பொறுப்பில் இருந்த சுப்பிரமணி கையெழுத்திட்டுள்ளார்.
இது அனைத்தும் பூங்கோதைக்கும் தெரிந்தே நடந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் பூங்கோதை, சுப்பிரமணியிடம் போலி நகைக்கான பணத்தை கட்ட கூறியுள்ளார். இதனையடுத்து பணம் கட்டாமல், சுப்பிரமணி தலைமறைவானதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், செயல் அலுவலர் பூங்கோதை கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் செயலாளர் ஜோதி என்பவரிடம், நீங்கள் இங்கு பணிபுரிய வேண்டுமென்றால் இந்த நகைக்கான பணத்தை நீங்கள் தான் கட்ட வேண்டும் என்று தடாலடியாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதி, தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில், ஒரு லட்ச ரூபாயை வெளியில் இருந்து தாம் பெற்று தருவதாகவும், அதற்கு மாதம் நான்காயிரம் ரூபாய் வட்டி பணம் கட்டுங்கள் என்று கூறி, பணத்தைப் பெற்று போலி நகைக்கான பணத்தைக் கட்டி உள்ளார். மீதித்தொகையான 28 ஆயிரம் ரூபாயை நகை மதிப்பீட்டாளர் ராமபிரபு கட்டியுள்ளார்.
இந்த மோசடி சம்பவங்களை வெளிக்கொண்டு வந்த தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாண்டி தெரிவிக்கையில், போலி நகை மோசடி மற்றும் செயல் அலுவலர் பூங்கோதை செயல்பாடுகள் குறித்து, மாவட்ட கூட்டுறவு பதிவாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் ஆகியோருக்கு பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இது மட்டுமின்றி ஒவ்வொரு கடனுக்கான கோப்புகளுக்கு 100 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும், பதவி உயர்வு அளிக்க லஞ்சம் கேட்பதாகவும், பூங்கோதை மீது அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
நகை மதிப்பீட்டாளர் ராமபிரபு கூட்டுறவு துறை பதிவாளரை தொடர்பு கொண்டு கேட்டபொழுது, பத்து நாட்களுக்குள் விசாரணை அதிகாரி அறிக்கையை தாக்கல் செய்வார் என்றும், அதன் பின்புதான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆளும் திமுகவினர் துணையுடன் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் போலி நகை மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.