எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து ஏற்படுவதற்கு முன்பு தண்டவாளத்தில் போல்ட் நட்டை கழற்றியது வெளிநபர்கள் அல்ல என்ற புதிய தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 11ம் தேதி விபத்து நடைபெற்ற கவரப்பேட்டை பகுதியில் இருந்த தண்டவாளத்தின் லூப் இணைப்பில் போல்ட் நட்டு கழற்றப்பட்டு இருந்ததே விபத்திற்கு காரணம் என்பது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, ரயில் விபத்துதிட்டமிட்ட சதி என்ற கோணத்தில் இதுவரை ரயில்வே ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் என 40 பேரிடம் விசாரணை நடைபெற்றது. விபத்துக்குள்ளான பாக்மதி விரைவு ரயிலுக்கு முன் சூலூர்பேட்டை வரை செல்லும் பயணிகள் ரயில் மூன்று நிமிடத்திற்கு முன்பு சென்றுள்ளது. இதனையடுத்து, 3 நிமிட இடைவெளிக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை கழற்ற முடியுமா என சோதனை செய்து பார்க்கப்பட்டது. பின்னர் தண்டவாள பராமரிப்பு பணிகளில் அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து போல்ட் நட்டுகளை கழற்றி பார்த்தபோது 11 நிமிடங்கள் வரை நேரம் எடுத்தது. இந்நிலையில், சூளூர்பேட்டை பயணிகள் ரயில் சென்றப் பிறகு மூன்று நிமிட இடைவெளிக்குள் போல்ட் நட்டுகளை முழுமையாக கழற்றி இருக்க வாய்ப்பில்லை என விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், சிறு சிறுப் பகுதியாக கழற்றி இருக்கலாம் என்றும், சூளூர்பேட்டை ரயில் கடந்ததும் முழுமையாக கழற்றி விடும்போது தான் பாகமதி விரைவு ரயில் விபத்தில் சிக்கி உள்ளது என்றும் கூறப்படுகிறது. தண்டவாளத்தின் போல்ட், நட்டுகளை முழுமையாக கழற்றிய பிறகு தான் பச்சை சிக்னலில் இருந்து சிவப்பு சிக்னலுக்கு மாறியுள்ளது. ஒரு பகுதி போல்ட் நட்டுகளை கழற்றும் போது சிக்னல் மாறும் வகையிலான தொழில்நுட்பம் இல்லை என்பது ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.
இதனிடையே கவரப்பேட்டை ரயில் விபத்திற்கு முன்பு பொன்னேரி ரயில் நிலைய பகுதியைச் சுற்றி மூன்று முறை தண்டவாளத்தின் பாகங்கள் கழன்று கிடந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வெளியாட்கள் வந்து இதுபோன்ற செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற நிலையில் முன்னாள், இன்னாள் ஊழியர்களோ அல்லது ரயில்வேயில் பயிற்சி பெற்றவர்களோ சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.