ப.சிதம்பரத்திற்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தனது மகனுக்காக வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கிராம மக்கள் வழிமறித்து கல்லால் அடிப்போம் திரும்பி போய் விடுங்கள் என ஆவேசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெற்றி பெற்றவுடன் தொகுதி பக்கமே தலை காட்டாத கார்த்தி சிதம்பரத்திற்கு மக்கள் காட்டும் எதிர்ப்பு குறித்து விரிவாக காணலாம்...

சிவகங்கை நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து, அவரது தந்தையும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய கிராம மக்கள், திரும்பி போகுமாறு கோஷமிட்டனர். மேலும் வாக்கு சேகரிக்க வந்தால் கல்லைக் கொண்டு எரிவோம் என ஆவேசப்பட்டனர்.

கடந்த முறை இதே தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே தலை காட்டவில்லை எனவும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். எம்.எல்.ஏ, எம்.பி என காங்கிரஸ் கட்சினரே உள்ள நிலையில் அவர்கள் தொகுதி மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை எனவும் பெண்கள் புகார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் முற்றுகையிட்டதால் என்ன செய்வது என தெரியாமல் விழித்த ப.சிதம்பரம், பிரச்சார வாகனத்தில் நின்றவாரே, பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, என்னை பேச விடுங்கள் என மன்றாடினார். வேண்டுமென்றால் நீங்களும் மேடை போட்டு பேசுங்கள் எனக் கூறியதால் கிராம அதிர்ச்சி அடைந்தனர்.

டாஸ்மாக் கடையில் மது குடித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாகவும், எனவே திமுக அரசு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கூறிய பெண்கள், இது குறித்து கேட்க சென்ற தங்களை, வேண்டுமென்றால் மேடை போட்டு பேசுங்கள் என ப.சிதம்பரம் கூறுவதாகவும் ஆவேசம் அடைந்தனர்.

கார்த்தி சிதம்பரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கமே வரவில்லை என்ற குற்றச்சாட்டும், தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டம் சிவகங்கை தொகுதி முழுவதும் இருந்து வரும் நிலையில், சொந்த ஊரான கண்டனூர் அருகிலேயே அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கிராம மக்களின் எதிர்ப்பால் ப.சிதம்பரம் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டதால் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதும், வெற்றி பெற்ற பின் தொகுதி பக்கமே செல்லாமல் இருப்பதும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாடிக்கையாகி உள்ள நிலையில், பல தொகுதிகளில் மக்கள் விரட்டி அடிப்பதால் திமுக, மற்றும் கூட்டணி கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

varient
Night
Day