எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்களவை தேர்தலில் பாஜக - பாமக கூட்டணி உறுதியான நிலையில், இரு கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தீவிர ஆலோசனைக்கு பிறகு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இன்று காலை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளை வழங்க பாஜக ஒப்புக் கொண்டது. இதனையடுத்து, இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக நிறுவனர் ராமதாஸ் கையெழுத்திட்டனர்.
இதனையடுத்து, சேலத்தில் இன்று நடைபெறும் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.