எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சென்னை திருவான்மியூர் கடற்கரையில் பாரா செய்லிங் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், பாரா செய்லிங் மூலம் பறந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு பலூன்களும் பறக்க விடப்பட்டன. கடற்கரைக்கு வந்தவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
வாக்காளர்கள் தங்களுடைய வாக்கு சாவடி எந்த முகவரியில் உள்ளது, அந்த முகவரி எந்த வரிசையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக கல்வி உலவியலாளர் டாக்டர் சரண்யா ஜெயக்குமார் வீடியோ பதிவு வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் இதுதொடர்பாக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில், திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 5 ஆயிரம் மாணவிகள் மூவர்ண ஆடைகள் அணிந்து, தேர்தல் ஆணையத்தின் லோகோ வடிவில் நின்று ஹீலியம் பலூன்களை வானில் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தலைமையில் மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள மலை கிராமத்தில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், இசை, நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பணம் வாங்காமல் வாக்களித்தால் மட்டுமே ஜனநாயக வாக்களிப்பாக அமையும் என பாடல்கள் பாடி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக, செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர், ஆயுதப் படையினர், காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், கூடுதல் உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரியலூரில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்று ரம்ஜான் பண்டிகை என்பவதால், அரியலூர் பள்ளிவாசலில் இருந்து தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் நகராட்சி பணியாளர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி, 'வாக்களிப்பது நம் கடமை, வரும் 19-ஆம் தேதி கட்டாயம் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை மற்றும் வி.லெட்சுமிபுரம் கிராமங்களில் காவல்துறை கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை நீலாங்கரையில் ஆழ்கடல் பயிற்சி நிறுவனர் அரவிந்த் தலைமையில் ஆழ்கடல் பயிற்சியாளர்கள் 6 பேர் 60 அடி ஆழ்கடலுக்கு சென்று மாதிரி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அப்போது, மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது நமது கடைமை , வாருங்கள் வாக்களிப்போம் என்று எழுதிய பதாகைகள் மற்றும் வாக்குபதிவு இயந்திரத்தின் மாதிரி ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.