மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களை பொருத்தும் பணி விறுவிறுப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்களை பொருத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பிரிக்ஸ் பள்ளியில் வைக்கப்பட்டுட்டுள்ள வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணிகள் தொடங்கியது. இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரமுகர்களின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான அருணா நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள 4 ஆயிரத்து 152 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் தொடங்கியது. விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இதேபோன்று, தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில்  பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. தருமபுரி வட்டாட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான சாந்தி பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி நடைபெற்றது. கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற பணிகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணப்பன் மற்றும் வட்டாட்சியர் கார்த்திக் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

புதுச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. நேற்று தலைமை தேர்தல் அலுவலக கிடங்கிலிருந்து எடுத்துவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் லாஸ்பேட்டை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வைக்கப்பட்டிருந்தது.  தொடர்ந்து பூட்டப்பட்ட அறையில் இருந்து வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை ஆட்சியர் குலோத்துங்கன் பார்வையிட்டார்.

Night
Day