தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கும், உரிமைகளுக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானால், உடனடியாக அதனை முறியடித்து, மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை தமது தலையாய கடமையாகக் கொண்டு அரும்பணியாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா. அம்மாவின் வழியில் நடைபோடும் புரட்சித்தாய் சின்னம்மா, அம்மாவைப் போலவே மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு செயலாற்றி வருகிறார். புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைச் சீற்ற காலங்களில் பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நின்று, உறுதுணையாக இருந்து, அனைத்து உதவிகளையும் வழங்குபவர் புரட்சித்தாய் சின்னம்மா என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கியபோது, அப்போதைய தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டு மக்களை தேடிச் சென்று, வேண்டிய உதவிகளைச் செய்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக, புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்திய திட்டங்கள் மிகவும் உன்னதமானவை. சுனாமியால் பாதிக்கப்பட்ட வேறு பல நாடுகளும் அம்மாவின் திட்டங்களை வரவேற்றுப் பாராட்டின.
நெருக்கடியான பல நேரங்களில் அம்மாவுடன் துணைநின்று ஆலோசனைகள் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மா, மக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படும் சமயங்களில் அம்மா வழியிலேயே, மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
சென்னை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் பல இடங்களில் கனமழை வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புகளில் மழை, வெள்ளநீர் புகுந்து, மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானபோது, தகவல் அறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, ஓடோடிச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கினார். அரிசி, இதர உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையலுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள், சமையல் உபகரணங்கள், வேட்டி, சேலை, லுங்கி,, போர்வைகள், பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள தொழுநோய் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்து, அங்கிருந்த மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்ததால், மருத்துவமனை நிர்வாகத்தினரும் நோயாளிகளும் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். இதுபற்றி அறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிகள் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை பகுதியில் சுமார் 750 சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு, அவர்களின் சலவைப் பெட்டிகள் பெருமளவில் சேதமடைந்த தகவல் அறிந்ததும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களுக்கு தேவையான சலவைப் பெட்டிகள் மற்றும் பல பொருட்களை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லை டவுன், பகத்சிங் தெரு, பேட்டை நரிக்குறவர் காலனி, குறுக்குத்துறை உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் நரிகுறவ சமுதாய மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்க புரட்சித்தாய் சின்னம்மா ஏற்பாடு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கரைவலை பகுதியில் மீனவ குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் மீன்பிடிப் படகுகள் உபகரணங்கள் வலைகள் ஆகியன சேதமடைந்ததால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொண்டார் புரட்சித்தாய் சின்னம்மா.
சென்னை மாநகரின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, புரட்சித்தாய் சின்னம்மா அப்பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவிகளையும் வழங்கினார். சேத்துப்பட்டு, சூளைமேடு, மயிலாப்பூர், தியாகராய நகர், ஆர்.கே. நகர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, பூந்தமல்லி, முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து, தேவையான உதவிகளை வழங்கினார் புரட்சித்தாய் சின்னம்மா.
தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்திருப்பதோடு, திரும்பிய பக்கம் எல்லாம் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அண்மையில் கள்ளச்சாராயம் அருந்திய 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இதுபற்றிய தகவல் அறிந்ததும், கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற புரட்சித்தாய் சின்னம்மா, மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார்.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கள்ளக்குறிச்சி சென்றிருந்தபோது, சாலையில் மயங்கி விழுந்து கிடந்த ஒருவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். அவர் சிகிச்சை முடிந்து, பூரண நலம்பெற்று வீடு திரும்பிய நிலையில், உரிய நேரத்தில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தனது உயிரைக் காப்பாற்றிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, நேரில் சென்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் இருந்து புரட்சித்தாய் சின்னம்மா திரும்பிச் சென்ற போது, சாலையில் ஒருவர் மயங்கி விழுந்து கிடந்ததைக் கண்டார். கள்ளச்சாராயம் அருந்திய அந்த நபர், உடல்நலம் பாதிக்கப்பட்டு கீழே விழுந்தது தெரியவந்தது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல புரட்சித்தாய் சின்னம்மா முயற்சி மேற்கொண்ட போது, மருத்துவமனை தரப்பில் ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்ததால் , உடனடியாக ஆட்டோ ஒன்றை பிடித்து, அவரை மருத்துவமனைக்கு அனுப்புமாறு புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தினார். புரட்சித்தாய் சின்னம்மா ஆணைக்கிணங்க கழகத் தொண்டர்கள் உடனடியாக ஆட்டோ பிடித்து, மயங்கி கிடந்தவரை அதில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பதும், அவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் பின்னர் தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்த கணேசன் வீடு திரும்பினார். புரட்சித்தாய் சின்னம்மா தன்னை மீட்டு, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அனுப்பியதால் தான், தான் உயிர் பிழைத்ததாகவும் இதற்காக சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பதாகவும், உடல் நலம் பெற்ற கணேசன் கண்ணீர் மல்க தெரிவித்தார். புரட்சித்தாய் சின்னம்மா உரிய நேரத்தில் வந்து உதவி செய்ததால் தான் தனது கணவர் கணேசன் உயிர்பிழைத்ததாக அவரது மனைவி அஞ்சலை கண்ணீர் மல்க கூறினார்.