மணப்பாறை பாலியல் தொந்தரவு - பள்ளி முதல்வர் சரண்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைதாகியுள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் முதல்வர் உள்ளிட்ட 5 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு‌ செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயின்ற 4ம் வகுப்பு மாணவி நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த மாணவிக்கு, பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. 

மாலையில் பள்ளி முடிந்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்து விசாரணை நடத்திய மணப்பாறை போலீசார் வசந்த குமாரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு பள்ளிக்குள் புகுந்து கற்களை வீசி வகுப்பறையின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம், இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் மற்றும் நிர்வாகிகளான மராட்ச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை தேடி வருகின்றனர்.

விளம்பர திமுக ஆட்சியில் பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது தொடர் கதையாகி வருவது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, 4ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் ஜெயலெட்சுமி காவல்நிலையத்தில் சரணடைந்தார். கைதாகியுள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் முதல்வர் உள்ளிட்ட 5 பேர் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு‌ செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். பள்ளி திறப்பு குறித்து உதவி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் திருமதி பேபி தெரிவித்தார்.


Night
Day