மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கட்டணம் வசூல் டோல்கேட் ஊழியர்கள் அடாவடி

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை விமானநிலையத்தில் உள்ள சுங்கச்சாவடியில் பணிபுரியும் வடமாநில ஊழியர்கள், விமானநிலையம் வருவோரிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்கதையாகி உள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.. 

மதுரை விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் நிலையில், பயணிகளுடன் அவர்கள் உற்றார், உறவினர்களும் விமான நிலையம் வந்து வழி அனுப்புவது வழக்கம். அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் வருகை தரும் பயணிகளை வரவேற்கவும் மக்கள் விமான நிலையம் வந்து செல்கின்றனர். 

இதுபோன்று பரபரப்பாக இருக்கும் மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில், அங்கேயே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களின் வருகைகள் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் 3 நிமிடங்களுக்குள் வெளியே வந்துவிட்டால், அந்த வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் 3 நிமிடத்திற்கு மேல் விமான நிலையத்தினுள் இருக்கும் வாகனங்களுக்கு கட்டணம், வசூலிக்கப்படும் எனவும் சுங்கச்சாவடி சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. 

இந்த சூழலில் மதுரை விமான நிலையம் சுங்கச்சாவடியை வடமாநிலத்தவர் டெண்டர் எடுத்துள்ளதால் தினசரி விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நிர்ணயிக்‍கப்பட்ட 
கட்டணத்தை விட வாகனங்களுக்கு அதிக தொகை வசூல் செய்யப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. 

வட மாநில ஊழியர்களின் இதுபோன்ற செயலால் பாதிக்கப்பட்ட நபர் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்றபோது, பணியில் இருந்த வடமாநில ஊழியர் ஒருவர் அரை மணி நேரத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட இருபது ரூபாய் கட்டணத்திற்கு பதில் 60 ரூபாய் முதலில் கேட்டுள்ளார்.

இதுதொடர்ந்து அரங்கேறி வருவதால், அதிக பணம் கேட்டு வசூல் செய்யும் காட்சியை சம்பந்தப்பட்ட நபர் வீடியோவாக எடுக்க ஆரம்பித்துள்ளார். இதனை தொடர்ந்து சுதாரித்துகொண்ட வடமாநில ஊழியர், ஏதோ பயணி தான் வீண் வாக்குவாதம் செய்வது போல சித்தரிக்க முயற்சி செய்து 20 ரூபாய் கட்டணம் தருமாறு கூறுகிறார்.

முதலில் அறுபது ரூபாய் கேட்டுவிட்டு இப்போது ஏன் இருபது ரூபாய் தருமாறு கூறுகிறீர்கள்.. என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என கேட்க, அதற்கு பதிலளிக்காமல் பேசியதையே திரும்ப திரும்ப பேசி சமாளிக்கப் பார்க்கிறார் அந்த வடமாநில ஊழியர்.. 

ஒருபுறம், சுங்கச்சாவடியில் பணியமர்த்தப்பட்டுள்ள வடமாநில ஊழியர்களில் பலருக்கும் தமிழில் பேச தெரியாததாலும், ஹிந்தியில் மட்டுமே பேசி கட்டணம் வசூலிப்பதாலும் ஓட்டுநர் மற்றும் ஊழியர் இடையேயான வாக்குவாதத்தில் விமானநிலையம் வரும் பயணிகளுக்கு வீண் காலதாமதம் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் இதுபோன்று தோராயமாக ஒரு தொகையை கூறி கூடுதல் தொகையை வசூல் வேட்டை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மதுரை விமான நிலைய பயணிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Night
Day