எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த இன்று அதிகாரிகள் வர உள்ள நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் சென்னை, கோவை மாவட்டங்களை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முடிவு செய்யப்பட்டு, அதன் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் இன்று வரவுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் வகையில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேல்நிலை நீர்தேக்க தொட்டிமீது நின்றவாறு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவசர உதவிக்காக இரண்டு ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.