எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் ஆறாவது நாளாக இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முடிவு செய்யப்பட்டு அதன் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி, தீக்குளிக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சாலையில் குடியேறி சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 6 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வீடுகளை காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்தார். அப்போது அமைச்சர் தூண்டுதலின் பேரில் மாவட்ட ஆட்சியர், வீடுகளை அகற்ற முயற்சிப்பதாகவும், சட்ட விரோதமாக இடத்தை அபகரிப்பது போல அரசு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி 3 மணி நேரமாக வீட்டு வாசலிலே காக்க வைத்து தங்களை ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டியுள்ள கிராம மக்கள் இன்று ஆறாவது நாளாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் பள்ளிக்கூடம், மயானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மாநகராட்சிக்குள் மூன்று சென்ட் இடம் மற்றும் வீடு கட்டி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.