எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்துள்ள மதுவிலக்கு சட்டத்தை திருத்தி, சட்டமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது பயனற்ற ஒன்று எனவும், இதனால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை எனவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட ஆட்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும் - தமிழகத்தில் ஆளும் கட்சியினரே அனைத்து வித சட்டமீறல்களையும், அராஜகங்களையும் அரங்கேற்றும் போது காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?- திமுகவினர் தமிழக மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்துள்ள மதுவிலக்கு சட்டத்தை திருத்தி தாக்கல் செய்திருப்பது பயனற்ற ஒன்று என தெரிவித்துள்ளார். இது ஏதோ பழைய பாத்திரத்திற்கு புதியதாக முலாம் பூசியிருப்பது போல் தோன்றுகிறது - இதனால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் தற்போது வரை 65 நபர்கள் உயிரிழந்துவிட்டனர் - இந்த பழியை தவிர்ப்பதற்காக திமுகவினர் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நாடகம் ஆடுவது மிகவும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி சட்டத் திருத்தத்தை அமைச்சர் முத்துசாமி இன்றைக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார் - அதாவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937ல், மதுவகை அல்லது மதி மயக்கும் மருந்தினை தயாரிக்க, கொண்டு செல்ல, வைத்திருக்க மற்றும் நுகர்வுக்கு தடை என்ற பிரிவு 4ல், அதனை அருந்துவதால் மரணம் ஏற்பட்டிருந்தால், ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை மற்றும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கு குறையாத தண்டனைத்தொகை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்ற ஷரத்துகள் ஏற்கனவே மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன - அதே ஆயுள்தண்டனையைத்தான் தற்போது மீண்டும் சொல்லி சட்ட திருத்தம் செய்துள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - உண்மைநிலை இவ்வாறு இருக்க ஏதோ தாங்கள் கடினமான நடவடிக்கை எடுத்துள்ளது போன்று ஒரு மாய பிம்பத்தை கட்டமைக்க திமுகவினர் முயற்சி செய்கிறார்கள் -தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்கும் வரை நடக்கவே நடக்காது என்பதுதான் நாடறிந்த உண்மை என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் என்ற பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாமல் ஊருக்கு வெளியில் இருக்கும் இடமோ அல்ல - இந்த இடம் ஊருக்கு நடுவில் தான் இருக்கிறது - இன்னும் சொல்லப்போனால் காவல் நிலையத்திற்கு அருகிலேயே இருக்கின்ற ஒரு பகுதி - ஏழை,எளிய சாமானிய மக்கள் வாழ்கின்ற பகுதி - இந்த இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது குறித்து இங்குள்ள மக்கள் பலமுறை காவல்நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை வைத்துள்ளதாக என்னிடமே நேரில் கூறினார்கள் - இந்த ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் இதை உடனே தடுத்து இருக்க முடியும் - ஆனால் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடப்பது நன்றாக தெரிந்திருந்தும், வேடிக்கைதானே பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர் - இத்தனை உயிர்களை பறிகொடுத்த பின்பு அதனை மறைப்பதற்காக இப்போது நாடகம் ஆடுவது ஏன்? - சட்டம் ஒழுங்கை சரியாக பராமரித்து இருந்தால் இன்றைக்கு இத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது - இது தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டுகிறது - குறிப்பாக காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரின் இயலாமையை காட்டுகிறது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் திமுக தலைமையிலான அரசு எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொண்டது, அங்கு பாதிக்கப்பட்டவர்களை எவ்வளவு அலட்சியமாக கையாண்டது, என்பதை நானே நேரில் கண்டு அதிர்ந்துபோனேன் - அதாவது கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் மரணங்கள் ஏற்பட்டது அறிந்தவுடன் அந்த பகுதிக்கு நேரில் சென்றேன் - அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் பார்ப்பதற்காக சென்றபோது மருத்துவமனை அருகில், போகிற வழியிலேயே ஒருவர் கேட்பாரற்று கிடந்தார் - அருகில் இரண்டு காவல்துறையினர் நின்று கொண்டு இருந்தனர் - இதை அவ்வழியாக சென்ற போதே பார்க்கமுடிந்தது -நானும் மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பார்கள் என்று நினைத்துக்கொண்டுதான் போகிறேன் - எனக்கு முன்பாகத்தான் தமிழக அமைச்சரும், முடிசூடா மன்னனுமான திருவாளர். உதயநிதி சென்று கொண்டிருந்தார் - நாங்கள் அமைச்சர் மருத்துவமனையில் இருந்து திரும்பும் வரை காத்திருந்து அதன் பின்னர்தான் மருத்துவமனைக்குள் செல்கிறோம் - அங்கு சிகிச்சையில் இருந்தவர்களை பார்த்துவிட்டு திரும்புகிறோம் - இதற்கே ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிடுகிறது - அதன் பிறகு மீண்டும் திரும்பி வரும்போது அந்த கேட்பாரற்று கிடந்த மனிதர் அதே இடத்தில் இருந்ததை பார்த்து பதறிப்போனேன் - முதலுதவி செய்யவேண்டிய காவல்துறையை சேர்ந்தவர்களோ, சேற்றில் கிடந்த அந்த மனிதரை யாரும் பார்த்துவிடாதபடி மறைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர் - இதனை கண்ட நான் உடனே வண்டியிலிருந்து இறங்கி சென்று அந்த நபரை, எங்கள் கட்சியினரின் உதவியோடு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் உடனே சேர்க்க செய்தேன் -கடவுளின் அருளால் அந்த உயிரும் இன்று பிழைத்துவிட்டது - இந்த லட்சணத்தில் தான் திமுக தலைமையிலான அரசு, கள்ளக்குறிச்சியில் செயல்பட்டது என புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார்.
தமிழகத்தில் இன்றைக்கு போதைப் பொருள் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு, எங்கு பார்த்தாலும் போதையில் தள்ளாடும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களை காணமுடிகிறது -தமிழகத்தில் இன்றைக்கு கஞ்சா மற்றும் வினோதமான புதுவடிவில் போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன - இதன் காரணமாக எங்குபார்த்தாலும் வன்முறைகளும், சட்டமீறல்களும் தலைவிரித்து ஆடுகின்றன - தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை -அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது - திமுக தலைமையிலான அரசின் அலட்சியத்தால் இன்றைக்கு தமிழகத்தில் பாதுகாப்பற்ற ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது - எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட நம்மிடம் இருக்கின்ற சட்டதிட்டங்களை சரியாக பயன்படுத்தினாலே எந்தவித தவறுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும் - ஆனால் திமுகவினரால் அதை எந்த காலத்திலும் செய்ய முடியாது - காவல்துறை சரியாக செயல்படவேண்டும் - எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சியாளர்கள் காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் -தமிழகத்தில் ஆளும்கட்சியினரே இன்றைக்கு அனைத்து வித சட்டமீறல்களையும், அராஜகங்களையும் அரங்கேற்றும்போது, காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு என்ன செய்யமுடியும்? - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றிட ஆட்சியாளர்கள் திறமையாக இருக்க வேண்டும் - இதே சட்டதிட்டங்களை பயன்படுத்திதானே புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தில் இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்தார் - அம்மா ஆட்சிகாலங்களில் கள்ளச்சாராயத்தால் ஒரு உயிர் கூட பலியானது இல்லையே - எனவே, திமுகவினர் தமிழக மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு அவர்களின் நலனுக்காக பாடுபடவேண்டும் என்று கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.