எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் மது போதையில் தரையில் விழுந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீருடையில் காவல்துறையினர் மது அருந்திய சம்பவம் குறித்து விரிவாக காணலாம்...
எம்.எஸ்., சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்றுவது, விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்...
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
அந்த வகையில் அந்த அமைப்பின் மாநில தலைவர் பழனியப்பன் தலைமையில் பாபநாசம் ரயில் நிலையத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுபட முயன்ற நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர்...
விவசாயிகள் சிறை வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மூடிக்கிடந்த மணமக்கள் அறையின் கதவையை திறந்து பார்த்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூன்று பேர் மது அருந்திவிட்டு போதையில் இருந்துள்ளனர்.
அதில் ஒரு காவலர் போதை தலைக்கேறிய நிலையில், நிதானம் இழந்து சீருடையுடன் தரையில் விழுந்து கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், அந்த காட்சிகளை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தனர்...
காவலர்கள் மதுபோதையில் இருந்ததை விவசாயிகள் தெரிந்து கொண்டதால், பதற்றமடைந்த மற்ற போலீசார், விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இவ்வளவு நடந்தும், போதையில் இருந்த அந்த காவலர் அசையக்கூட முடியாத நிலையில் மயங்கி கிடந்தார். சக காவல்துறையினர் அவரை எழுப்பி நிற்க வைக்க முயற்சிக்க, அந்த காவலரோ, மீண்டும் மீண்டும் கீழே சரிவதுமாகவே இருந்தார்...
போராட்டத்தில் ஈடுபட்ட தங்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர், உணவு எதுவும் ஏற்பாடு செய்யவில்லை என்றும், ஆனால் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் குடித்துவிட்டு மதுபோதையில் தள்ளாடிக்கொண்டு இருக்கிறார்கள் எனக்கூறி, காவல்துறையை கண்டித்து விவசாயிகள் திருமண மண்டபத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வரின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை உள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்கு வந்த காவலர் ஒருவர் போதையில் சரிந்து கிடந்த சம்பவம், தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் எந்த அளவுக்கு பரவி உள்ளது என்பதற்கு சான்றாக உள்ளது...