எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார்.
கடந்த 1999ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மனோஜ் பாரதிராஜா அறிமுகமானார். பின்னர் சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்களிலும் மனோஜ் பாரதிராஜா நடித்திருந்தார். மனோஜ் பாரதிராஜாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் மனோஜ் பாரதிராஜா உயிர் பிரிந்துள்ளது. மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மனோஜ் பாரதிராஜா உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு இயக்குநர் லிங்குசாமி, சீமான் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும், மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்திய பின் மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.