எழுத்தின் அளவு: அ+ அ- அ
உயர் ரக கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற விலையுயர்ந்த போதை பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கை காவல்துறை அதிரடியாக கைது செய்திருப்பது சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. என்ன நடக்கிறது தமிழ்நாட்டில், சிறுவர்கள் முதல் சினிமா துறையினர் வரை போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
விளம்பர திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சமூகத்தை சீரழிக்கும் கஞ்சா, ஹெராயின், மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருட்களின் புழக்கம் தமிழ்நாடு முழுவதும் பெருகிவிட்டது. குறிப்பாக மாணவர் சமுதாயத்தினர் இடையே போதை பொருள் பழக்கம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியையும், கவலையும் அளிக்கிறது.
பெரும்பாலும் உயர் ரக கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருட்கள் ரெட்டிட், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் மூலமாக கல்லூரி மாணவர்கள், ஐ.டி துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் சினிமா துறையினரை குறி வைத்து விற்கப்படுகிறது...
அந்த வகையில் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான மாணவர்கள் கொடுத்த தகவலின்படி, மண்ணடி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிக்கினர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது மட்டுமின்றி அதிக விலை கொண்ட மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்களும் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமானது..
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, யாரையெல்லாம் தொடர்புகொண்டு அவர்கள் கஞ்சா பொட்டலங்கள், மெத்தபெட்டமைன்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்தனர் என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்..
அப்போதுதான் கைதானவர்கள் செல்போனில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் போன் நம்பரும் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து உடனடியாக சென்னை நுங்கம்பாக்கம் விரைந்த காவல்துறையினர் மன்சூர் அலிகான் வீட்டில் இருந்த அலிகான் துக்ளக்கை கைது செய்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்....
சுமார் 12 மணி நேரம் அலிகான் துக்ளக்கிடம் நட்திய விசாரணையில் போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து மன்சூர் அலிகான் மகன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட தனது மகனை சந்திப்பதற்காக நடிகர் மன்சூர் அலிகான் நீதிமன்றத்திற்கு நேரில் சென்றார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் வாகனத்தில் அமர வைக்கப்பட்டிருந்த தனது மகனிடம் சென்று கஞ்சா பிடித்தால் போலிஸ் பிடிப்பார்கள் என தெரியாதா? தப்பு பண்ணலாமா என கண்டித்தார். மேலும் மகனை சாப்பிட்டியாடா என நலம் விசாரிக்கவும் செய்தார் மன்சூர் அலிகான்...
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் படித்த அலிகான் துக்ளக், தற்போது சினிமாவில் உதவி இயக்குநராகப் பணி செய்து வருகிறார். அவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருட்களை பயன்படுத்தியதோடு, சினிமா துறையினர், கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட பலருக்கும் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை மீனா போதை மருந்து வைத்திருந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் மகனிடம் விசாரணை நடைபெற்று வருவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.