மயிலாடுதுறையில் பதுங்கியருக்கும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் இரவு நேரத்தில் பொதுமக்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கூறைநாடு சாலையில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தை நடமாட்டம் குறித்த செய்தி காட்டுத்தீயாய் பரவிய நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து கூறைநாடு பகுதியில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வியாக்கிழமை அதிகாலை மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை புலி, அருகாமையில் உள்ள ஆரோக்கியநாதபுரம் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதை கண்ட அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வனத்துறையினரின் ஆய்வில் சிறுத்தை கால் தடத்தை கண்டறிந்த வனத்துறையினர், ஆரோக்கியநாதபுரம் பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்தை, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வன அலுவலருமான அபிஷேக் டோமர் நேரில் பார்வையிட்டு வனத்துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
சிறுத்தை கூரைநாடு பகுதியை விட்டு வெளியேறி ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அபிஷேக் டோமர் தெரிவித்துள்ளார்.
உடல் வெப்பத்தின் மூலம் கண்காணிக்க கூடிய கருவிகள், கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் இரவு நேரத்தில் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர் தெரிவித்தார்.
இரவு நேரத்தில் பொதுமக்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்க வேண்டாம் என்றும் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. பொது தேர்வு நடைபெறும் பள்ளிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்னர்.