எழுத்தின் அளவு: அ+ அ- அ
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 6 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் மிகவும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் 32 நபர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து நிகழ்ந்த மருத்துவமனையில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்துள்ளார்களா? என்பதை கண்டறிய வேண்டும் என கூறியுள்ளார். இந்த விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு முறைகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை உடனே ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.