மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உடலுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தன் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தந்தையை இழந்து வாடும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஆறுதல் கூறினார்.

குமரி அனந்தன் மறைவு செய்தி தன்னை உறைய செய்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மறைந்த மூத்த அரசியல்வாதியான குமரி அனந்தன் உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஊழலற்ற அரசியல்வாதியாக, நேர்மையான இலக்கியவாதியாக திகழ்ந்தவர் குமரி அனந்தன் என கூறியுள்ளார். பாரதமாதாவுக்கு கோவில் அமைக்க வேண்டும் என நடைப்பயணம் செய்து தன்னை தானே வருத்தி கொண்டு தூய்மையான அரசியல் நிலவ தொண்டாற்றியவர் என்றும் வைகோ கூறியுள்ளார்.

காமராஜரின் கொள்கை வாரிசாக இருந்த குமரி அனந்தன் மறைவு வருத்தம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசிகவை தனிப்பட்ட முறையில் வாழ்த்தி ஊக்குவித்தவர் என கூறினார்.

பெருந்தலைவர் காமராஜரின் சீரிய தொண்டராகவும். நம்பிக்கைக்குரியவராகவும், மகாத்மா காந்தியின் உண்மைத் தொண்டராகவும் வாழ்ந்த குமரி அனந்தனின் மறைவு வருத்தமளிப்பதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழிசை செளந்தரராஜன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தன் உடலுக்கு கி.வீரமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய் அவர், குமரி அனந்தன் மறைவு அவரது குடும்பத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு என்றும் தெரிவித்தார்.

தமிழுக்கும், தமிழ் மக்களுக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தமிழுக்கு பெருபங்காற்றிய குமரி அனந்தன், பனை மரத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், மதுஒழிப்பை பற்றியும் பேசியவர். குமரி அனந்தனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையாகிய குமரி அனந்தன் மறைவிற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான தலைவரான குமரி அனந்தனின் மறைவு வருத்தமளிப்பதாக தெரிவித்தார். 

இதனிடையே குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குமரி அனந்தன் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் 5 முறை உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வைத்துள்ளார். அவரது மறைவையொட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ் திருப்பணிக்காக வாழ்ந்த குமரி அனந்தன் வாழ்வை போற்றும் வகையில் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


Night
Day