மலை மீது அமர்ந்து சட்டவிரோத செயல்... சிசுவின் பாலினத்தை கண்டறியும் கும்பல் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கர்ப்பிணியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் சட்டவிரோத கும்பலை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளனர். ஐந்தே நிமிடத்தில் பாலினத்தை கண்டறிவது எப்படி, இவர்களை மடக்கி பிடித்தது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.... 
 
தருமபுரி மாவட்டம் பின் தங்கிய மாவட்டமாக கருதப்படுவதால் பெண் சிசுக்கொலை அதிகம் நிகழ்ந்துள்ளது. பெரும் முயற்சிக்கு பிறகு பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால் பெண் சிசுக்கொலை தருமபுரி மாவட்டத்தில் தடுக்கப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலை தடுக்கப்பட்டாலும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என அறியும் மோகம் இன்னும் இந்த மாவட்ட மக்களிடம் குறைந்தபாடில்லை.

ஏற்கனவே பெண் குழந்தை பெற்றெடுத்த பெற்றோர், அடுத்த குழந்தை ஆண் குழந்தையாக பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு வகைகளில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிய முயற்சி செய்வது தொடர் கதையாகத்தான் உள்ளது.

இந்நிலையில் கருவுற்ற தாய்மார்களை குறி வைத்து சில கும்பல்கள் நடமாடும் ஸ்கேன் கருவி மூலம் கருவில் உள்ள குழந்தை பெண்ணா என கண்டறிந்து சொல்லும், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர், காரிமங்கலம், ராஜாபேட்டை, பரிகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனை செய்யும் கும்பலை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவர்களை கைது செய்து ஸ்கேன் கருவிகளை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே ஜாமீனில் வெளிவந்த கும்பல், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நெக்குந்தி முத்தப்பா நகர் பகுதியில் மீண்டும் அதே பாணியில் சிசுவின் பாலினத்தை கண்டறியும் செயலில் ஈடுபட்டதை அறிந்த சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை அதிகாரிகள் சட்டவிரோத கும்பலை பிடிக்க சுகாதாரத் துறையில் பணியாற்றும் பெண் செவிலியரை மாற்று வேடத்தில் கும்பலை அணுக வைத்து அனுப்பி உள்ளனர். 

நத்தஅள்ளி பள்ளியில் சமையலராக பணியாற்றும் லலிதா என்பவர் கர்ப்பிணி பெண்களை அணுகி அவர்களை அழைத்துச் சென்று கருவில் உள்ள குழந்தை பாலினத்தை தெரிவிக்கும் இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் இருக்கும் இடத்தை அறிய மாறுவேடத்தில் சென்ற சுகாதாரத்துறையினர், நெக்குந்தி முத்தப்பா நகர் பகுதியில் மலை மீது உள்ள தனி வீட்டில் நடமாடும் ஸ்கேன் கருவி வைத்து 4 பெண்களுக்கு ஸ்கேன் செய்ததை கண்டறிந்தனர். 

அதேபோல் சுகாதாரத்துறை அனுப்பிய நபர், ஸ்கேன் செய்ய உள்ளே சென்றபோது அங்கு பதுங்கி இருந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணிகள் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி தலைமையிலான குழுவினர் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து நடமாடும் ஸ்கேன் கருவி, கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் நபர் ஒருவருக்கு ஸ்கேன் செய்து பார்க்க சுமார் 13 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளதும், ஐந்தே நிமிடத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவித்து அவர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றி தந்திரமாக சட்டவிரோத வேலையில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது.

ஸ்கேன் பார்க்கும் பணியில் தகுந்த படிப்பறிவே இல்லாத கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு உதவியாக சின்ராஜ், நடராஜ் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இதனை அடுத்து நான்கு பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சின்னராஜ், நடராஜ், முருகேசன் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் முருகேசன் என்ற முக்கிய குற்றவாளி சட்டத்திற்கு புறம்பாக குழந்தையின் பாலினத்தை அறிந்து சொல்லும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும், அண்மையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது. இவர்கள் தொடர்ந்து இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Night
Day