நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் உள்ள மக்களை வெளியேற்ற இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், தற்போது எடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில் விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மாஞ்சோலையை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ், நிவாரண திட்டங்களுக்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கான மாற்று ஏற்பாடு குறித்து அரசு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என எடுத்துரைக்கப்பட்டது. மேலும், 144 குடும்பங்களுக்கு இன்னமும் வீடு கிடைக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.
தொடர்ந்து அரசு தரப்பில் எஞ்சியுள்ள 84 குடும்பங்களை மாஞ்சோலையில் இருந்து வெளியேற உத்தரவு பிறக்கபிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் இப்போதைக்கு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் மனுதாரர்களுக்கு அரசு வீடு கட்டிதரவில்லை எனில் எப்போது வேண்டுமானலும் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய நிவாரண நடவடிக்கைகளை தொடர தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.