மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து கொடுக்கும் வரை வெளியேற்ற கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையை சேர்ந்த அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். இதில் தாங்கள் மாஞ்சோலையில் இரு தலைமுறைகளாக வசிப்பதாகவும், 2028ம் ஆண்டு பிப்ரவரியோடு குத்தகை காலம் முடிந்த பின் இந்த நிலம் அரசிடம் வழங்கப்பட இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குத்தகை காலம் முடியும் முன்பே பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் 7ம் தேதிக்கு முன்பாக வெளியேற வேண்டும் என மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

வீடு கூட இல்லாமல் சில மாஞ்சோலை தொழிலாளர்கள் ஏழ்மையான சூழலில் வசிப்பதாகவும், திடீரென அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதால் செய்வதறியாது தவிப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை அரசு செய்ய வேண்டும் என்றும், மறுபணி வாய்ப்பு வழங்கப்படும் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், 700 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கலைஞரின் கனவு இல்லத்தின் மூலம் வீடு கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், இலங்கை தமிழர்கள் பலருக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரப்பர் கழகத்தில் பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு போன்றவற்றை செய்து தர வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அதற்கு அரசுத்தரப்பில், BBTC ஒரு தனியார் நிறுவனம் என தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அங்கிருந்து, அவர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day