எழுத்தின் அளவு: அ+ அ- அ
தனியார் பள்ளியில் துணை முதலமைச்சர் உதயநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உச்சி வெயிலில் ஹேப்பி பர்த்டே உதய் அண்ணா என மாணவர்களை கோஷம் போட வைத்த திமுக நிர்வாகிகளின் மனிதாபிமானமற்ற அராஜக செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். துணை முதலமைச்சருக்கு ஜால்ரா அடிப்பதற்காக மாணவ, மாணவிகள் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு ...
முதலமைச்சரின் மகன் என்ற காரணத்துக்காக எம்எல்ஏ-வாகி, அமைச்சராகி அதன் பின் துணை முதல்வராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி. இதையடுத்து என்ன நடக்கும் என்பதை சொல்லவா வேண்டும். இருக்கிற வேலையை எல்லாம் விட்டுவிட்டு உதயநிதிக்கு துதிபாடுவதை அதிகாரிகளும், அமைச்சர்களும், கட்சியினரும் முழுநேர வேலையாக செய்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், உதயநிதிக்கு பிறந்தநாள் என்றால் சும்மா விட்டுவிடுவார்களா என்ன? புதன் கிழமை உதயநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை ஒட்டி, போஸ்டர்கள், கொண்டாட்டங்கள் என உடன்பிறப்புகளின் அலப்பறைக்கு அளவில்லாமல் போனது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் அவர்களை முகம் சுளிக்க வைத்தன.
இதற்கெல்லாம் பல படிகள் மேலே போய் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதியின் பிறந்த நாளை அராஜகமாக கொண்டாடி இருக்கின்றனர் திமுக-வினர். ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நிகழ்ச்சிக்கு ஏராளமான மாணவர்கள் வந்துள்ளனர். போட்டியில் பங்கேற்க வந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை 2 மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்து யோகாசனம் செய்ய வைத்துள்ளனர். அவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
உச்சி வெயிலில் யோகா செய்து ஏற்கனவே களைப்படைந்த மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி உதயநிதியின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர் திமுக-வினர். எந்த பாவமும் செய்யாத அந்த மாணவ, மாணவிகளை ஹாப்பி பர்த்டே உதய் அண்ணா என கூற வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள்.
அப்போது மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை கையில் ஏந்தி நிற்க வைக்கப்பட்டனர். உதயநிதியின் படத்தை தூக்கிபிடித்தபடி மொட்டை வெயிலில் மாணவ, மாணவிகள் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியதை மேடையில் இருந்தபடி திமுக-வினர் ரசித்தபடி இருந்தனர்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக-வினர் செய்த அராஜகம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில நிர்வாகி ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக-வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவர் என்ற பொறுப்பில் கண்ணும் கருத்துமாக சேவையாற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ், எப்போதுதான் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செயல்படுவீர்கள்? உங்கள் துறையில் நடக்கும் இதுபோன்ற தொடர் அநீதிகளுக்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள் என தமிழக பாஜக எக்ஸ் வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
உங்கள் அநீதிகளுக்கு ஒரு அளவே இல்லையா தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே? உங்களின் தற்பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்ள பள்ளி மாணவர்கள்தான் கிடைத்தார்களா?" என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களை கொண்டாட பள்ளிக் கல்வித்துறை எப்படி அனுமதிக்கிறது, பிறந்த நாள் கொண்டாடிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.