சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத நபர்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு, முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது என்றும், தமிழக மக்களை, குறிப்பாக பெண்ணினத்தை பாதுகாக்கக் தவறிய திமுக விளம்பர அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத நபர்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மிகவும் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது - தமிழகத்தில் இன்றைக்கு பெண்களின் பாதுகாப்பு, முற்றிலும் கேள்விக்குறியாகியிருப்பது ஒவ்வொரு நாளும் வெட்டவெளிச்சமாகி வருகிறது - தமிழக மக்களை, குறிப்பாக பெண்ணினத்தை பாதுகாக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பு நிறைந்த ஒரு வளாகமாக கருதப்படுகிறது - மேலும், இந்த வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், சோதனைச்சாவடிகள் மற்றும் எண்ணற்ற காவலர்கள் மூலம் மிகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது - இப்படிப்பட்ட ஒரு இடத்திலேயே கல்வி பயிலும் மாணவிக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது - இதற்கு திமுக தலைமையிலான அரசுதான் முழுப் பொறுப்பேற்கவேண்டும் - தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகிறது - திமுக ஆட்சி இருந்தாலே சமூக விரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன என்று, புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, இன்றைக்கு கொலைக்களமாக, போதை கூடாரமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு, வாழத் தகுதியற்ற ஒரு மாநிலமாக மாற்றிய பெருமை திமுக தலைமையிலான விளம்பர அரசையே சேரும் - தமிழகத்தில் போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதை என்றைக்கு, இந்த அரசு தடை செய்கிறதோ, அன்று தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு என்பது கிடைக்கும் - ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழக மக்களுக்கு பாதுகாப்பு என்பது கண்டிப்பாக கிடைக்காது - திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மாநிலத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் - சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுவிடும் - இதற்கெல்லாம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள், திமுகவினருக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அவருக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும் - தமிழக காவல்துறை ஆளும்வர்க்கத்தினரின் எந்தவித புறஅழுத்தங்களுக்கும் ஆளாகிவிடாமல், இதை உடனே தீர விசாரித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் இந்த அவல நிலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மேலும், தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து, இதை முறையாக விசாரித்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு விரைவில் நியாயம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.