மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் - கண்ணகி சிலைக்கு மிளகாய் அரைத்து பூசும் நூதனப் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் இருந்து சென்னைக்கு பாஜக மகளிர் அணி சார்பில் நீதிப் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்ட மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதிப்பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட-து. இதில் பாஜக நிர்வாகி குஷ்பூ, பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க விருந்தனர். ஆனால், பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், பேரணி துவங்க விருந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 
இந்நிலையில், தடையை மீறி மதுரை சிம்மக்கல் வடக்குபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன் திரண்ட பாஜக மகளிர் அணியினர், விளம்பர திமுக அரசுக்கு எதிராக கையில் சிலம்பு ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவில் முன்பு மிளகாய் அரைத்து பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சாந்த நிலையில் உள்ள கண்ணகி சிலைக்கு மிளகாய் வற்றல் இடித்து பூசினால் உக்கிர நிலைக்கு வரும் என்பது ஐதீகம் என்பதால், அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கோவில் அருகில் இருந்து தீச்சட்டி எடுத்த பாஜக மகளிரணியினர், முழக்கங்கள் எழுப்பியபடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பாஜக மகளிரணியினரின் தொடர் போராட்டத்தால் கோவில் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு நிலவியது.


Night
Day