எழுத்தின் அளவு: அ+ அ- அ
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடலில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கிய ஆந்திர மாணவர்கள் 4 பேரின் உடல்களை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆந்திராவில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த அரசு கல்லூரி மாணவர்கள் 30 பேர், கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 10 பேர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர், கடலில் தத்தளித்த 6 பேரை பத்திரமாக மீட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்ற நான்கு பேர் மாயமானதால் தொடர்ந்து 2 நாட்களாக தேடிவந்த நிலையில், சேஷா ரெட்டி, மோனிஷ், பெத்துராஜ், பிரபு ஆகிய நால்வரின் உடல்கள் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கின. தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.