முடிவுறாத கால்வாய் திட்டம் - முதலமைச்சர் திறந்து வைத்திருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-


நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வறண்ட பகுதிகளை வளமாக்கும், வெள்ளநீர் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாமிரபரணி-கருமேணி-நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய்த் திட்டம் நிறைவேற 16 ஆண்டு காலம் ஆனது ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இது குறித்த விரிவான செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிக்கு கடந்த 2001ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சென்றிருந்த போது, அப்பகுதிகளில் உள்ள பெண்கள் சாலைகளில் தண்ணீரை பிடித்து நீண்ட தூரம் நடந்து செல்வதை பார்த்துள்ளார். அப்போது, அவர்களை அழைத்து குறைகளை கேட்டறிந்த அம்மா, தாமிரபரணி-கருமேணி-நம்பியாறு இணைப்பு வெள்ள நீர்க் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இந்த திட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நெல்லை மாவட்டம் வெள்ளாங்குழியில் இருந்து சாத்தான்குளத்திற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பின்னர், 2006 முதல் 2011 வரை விளம்பர திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது, இந்த வெள்ளநீர்க் கால்வாய் திட்டப் இட்டேரி, புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அதன் பிறகும் இந்த திட்டம் மாற்றுப் பாதையில் அமைக்கப்பட்டதால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கடந்த 2014ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டம் இன்னமும் நூறு சதவீதம் முடிவடையாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த 2023 டிசம்பரில் வெள்ளநீர்க் கால்வாய் திறக்கப்பட்டதால் அதே கால்வாய் கரைகளில் 42 இடங்களில் உடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் திடியூர் பகுதிகளில் வேளாண்மைப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் புகார்கள் எழுந்தன.

இதேபோல், கடந்த 2024 டிசம்பரில் பெய்த கடும் மழை காரணமாக பாபநாசம் அணையை திறந்து தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அணை முழுக்கொள்ளளவை எட்டிய உடன் தண்ணீரை திறக்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உத்தரவிட்டு, ஒரே நாளில் அணைகள் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றின் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் இழப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் காவிரி-பவானி இரு ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் 12 ஆம் நூற்றாண்டில் மனித ஆற்றலை கொண்டு 12 ஆண்டுகளுக்குள் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டு பாசன வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், தாமிரபரணி-கருமேணி- நம்பியாறு இணைப்பு வெள்ள நீர்க் கால்வாய்த் திட்டம் நிறைவேற 16 ஆண்டுக் காலம் ஆனது ஏன்? என்பதுதான் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் கால்வாய் திட்டம் முழுமை பெறாமல் உள்ளதாகவும், அவரச கதியில் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெள்ள நீர் கால்வாய் வெட்டுவதற்காக நிலங்கள் கொடுக்கப்பட்ட பலருக்கும், இன்னும் அதற்கான தொகையை கூட விளம்பர அரசால் வழங்கப்படவில்லை என்பதும் கூறப்படுகிறது. மேலும், முழுமை பெறாத திட்டத்தை முதலமைச்சர் திறந்து வைத்திருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயா பிளஸ் செய்திகளுக்காக நெல்லை செய்தியாளர் செல்வராஜ்.

Night
Day