விண்வெளி கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது முதல்வரின் குடும்பம் பயனடைவதற்காக என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. தொழில்துறை கொள்கையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் சிறப்பு கார்ப்புரிமை வழங்கப்படுகிறது. இதில் ஊதிய மானியமாக முதல் ஆண்டு 30 சதவீதமும், 2வது ஆண்டு 20 சதவீதமும் 3வது ஆண்டில் 10 சதவீதமும் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் அது தமிழ்நாட்டில் விண்வெளி தொழில் கொள்கை அல்ல அது கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரங்களுடன் காட்டமாக விமர்சித்துள்ளார். இதன் மூலம் முதலமைச்சரின் குடும்பம் மட்டுமே பயன்பெறும் எனவும், வானம் ஸ்பேஸ் நிறுவனத்தின் பங்குதாரராக முதலமைச்சரின் மருமகன் உள்ளதால், அந்நிறுவனத்திற்காகவே விண்வெளி கொள்ளை உருவாக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நிதியாண்டில் தமிழகம் புதிய முதலீடுகளுக்காக போராடி வரும் நிலையில் தனது குடும்பத்திற்காக தொழில்துறை கொள்கையை வெளியிடும் அளவிற்கு சர்வாதிகார அரசாக திமுக உள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தொழில் கொள்கை மூலம் சபரீசன் தொடங்கியுள்ள விண்வெளி தொழில் நிறுவனம் 20 சதவீதம் அளவிற்கு மூலதன மானியம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை, இதனை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்றும் காட்டமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.