எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பேருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளி கல்லூரிகளை கட்டாயப்படுத்துவதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொன்னேரி வட்டம் ஆண்டார்குப்பம் கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பேருந்துகளை அனுப்பி வைக்குமாறு அனைத்து தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எக்ஸ் தளம் வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக அரசு நடத்தும் நிகழ்ச்சிகள் என்றாலே, பொதுமக்கள், வணிக நிறுவனங்களிடம் நடத்தும் வசூல் வேட்டை முதற்கொண்டு, கூட்டத்தை காட்டுவதற்காக, நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியம் தரமாட்டோம் என்று கூறி ஏழை எளிய மக்களை மிரட்டி அழைத்து வருவது, தனியார் பள்ளி, கல்லூரிகளை மிரட்டி வாகனங்களை வாங்குவது என அடாவடித்தனம் செய்வதையே திமுக வாடிக்கையாக வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். திமுகவினரிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, எதற்காக, சாமானிய மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும் சாடியுள்ளார்.