முதலில் ராமதாஸை மன்னிப்பு கேட்க சொல்லு...அவதூறாக பேசிய திமுக பேச்சாளர்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாமக நிறுவனர் ராமதாஸை சமூக வலைதளத்தில் அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் காவல் நிலையத்தில் பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி குடியாத்தம் குமரன் என்ன தான் பேசினார். இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காண்போம்...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸின் 87-வது பிறந்தநாள் விழா கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. அப்போது பேசிய ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தார். ஏன் உங்களது அப்பா வீட்டுச் சொத்திலா நான் 10.5 சதவீதம் கேட்கிறேன்? இது எங்கள் நாடு, இது எங்கள் பூமி. உனக்கு இங்கே என்ன வேலை? உன்னிடம் போய் நான் 10.5 சதவீதம் கேட்க வேண்டுமா? என கொந்தளித்துப் பேசியிருந்தார். ராமதாஸின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

உன்னை கோட்டையில் சந்திக்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை உன்னிடம் கேட்டால்.. நீ மத்திய அரசை கை காட்டுகிறாய். அதற்கு எதுக்கு முதல்வர்? ஏதோ நடக்கப் போகிறது; நடத்திக் காட்டப் போகிறோம், அண்டம் கிடுகிடுங்க நடக்கப் போகிறது எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் பொதுமக்கள் முகம்சுழிக்கும் அளவுக்கு ராமதாஸை மிக மோசமாக பேசியிருந்தார். அதில், வன்னியர் இன மக்களை ஊமையர்கள் என ராமதாஸ் தான் இழிவுப்படுத்துவதாக விமர்சித்திருந்தார்

மருத்துவர் ராமதாஸை ஒரு நல்ல மன நோயாளி மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருத்தார் குடியாத்தம் குமரன்.

ராமதாஸ் மூத்த தலைவர்கள் போல் நடந்து கொள்ளவில்லை என்றும், ஒரு எம்பி, எம்எல்ஏவாக நின்று வெற்றி பெற யோகிதம் இல்லை, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற யோகிதம் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். 

அவமானமாக இருந்தால் நீயும், உன் பிள்ளையும் தூக்கில் தொங்க வேண்டியது தானே, என்றும் ராமதாஸை மிக மோசமாக பேசியிருந்தார் குடியாத்தம் குமரன். 

ராமதாஸ் இளைஞர்களிடம் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், பொய், பித்தலாட்டம் அரசியலை மேற்கொள்ளும், ராமதாஸ் ஆரோக்கியமான தலைவர் கிடையாது என்றும் விமர்சித்திருந்தார். 

பூரண மதுவிலக்கு கோரும் ராமதாஸ், ஒரு பகுதி நேர குடிகாரர் என்றும் அவரது மகன் முழு நேர குடிகாரர் என்று ஏற்கனவே வன்னியார் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி தெரிவித்திருந்ததாகவும் சகட்டுமேனிக்கு விமர்சித்திருந்தார் குடியாத்தம் குமரன்.

குடியாத்தம் குமரனின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பாமகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடியாத்தம் குமரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

என்னதான் அரசியலில் முரண்பாடு இருந்தாலும், ஒரு தலைவரை இப்படி பொதுவெளியில் அநாகரிமாக பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day